widgets

ஞாயிறு, 24 மே, 2015

வல்லமையாளர் விருது


Monday, April 20, 2015வல்லமையாளர் விருது
இவ்வார வல்லமையாளர் விருது
வல்லமைமிகு கவிஞர்  றியாஸ்முஹமட் அவர்கள்

றியாஸ் முஹமட்


இலங்கையின் கல்குடா பகுதியில் பிறந்து வளர்ந்து, இன்று வளைகுடாப் பகுதியில், மத்தியக் கிழக்கு நாடான கத்தாரில், கத்தார் தொலைதொடர்பு நிறுவனத்தில் பணியாற்றிவரும் “கவியருவி றியாஸ் முஹமட்” அவர்களை இவ்வார வல்லமையாளராகப்  பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். சென்ற திங்களன்று வல்லமை இதழில் “சீதனம்”  என்ற தலைப்பில் சீதனம் தரமுடியாதக் கொடுமையால் திருமணமாகாமல் இருக்கும் முதிர்கன்னிகளின் வருந்தத் தக்க நிலையினை, இந்த நூற்றாண்டிலும் நிகழும் இந்த சமுதாய அவலத்தை விவரிக்கும் கவிதையை எழுதியதற்காக வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார் கவியருவி றியாஸ் முஹமட்.   அக்கவிதையின் சில வரிகள் கீழே…
சீதனம்

கன்னிக்கு ஏன் வேதனை…?
கருமச் சீதனத்தின் சோதனை!
கன்னிக்கோ
கலியாணம்
கடந்த வயது…
கலியாணச் சந்தையில்
கனவுகளோடு
காலூன்றி நிற்கும்
கற்புக் கன்னி!
கல்யாணராமர்களோ
கன பேர்,
கருமச் சீதனக்
கனவுகளோடு…
கல்யாணராமனுக்குக்
காணிக்கையில்லை,
காணிக்கை கேட்பவன்
கடவுளுமில்லை!
கரும்பு தின்னக் கூலியோ… ?
கணவனாகக் காசோலையோ…?
[…]

பள்ளிநாட்களில் எழுதுவதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, “மாவடிச்சேனை முஸம்மில்” “றியாஸ் முஹமட்” என்ற பெயர்களுடன் தொடங்கியது கவிஞர் றியாஸ் முஹமட்டின் இலக்கியப்பயணம்.    கதை, கட்டுரை, கவிதை என பல்துறைகளில் எழுதி வரும் றியாஸ் முஹமட்டின் படைப்புகள் இந்நாள் வரை மித்திரன் வார மலர், தினமுரசு வாரமலர், சுடர் ஒளி, வீரகேசரி போன்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளன. மண் வாசனையுடன் எழுதுவதே தனக்கு மிகவும் விருப்பம் என்று கூறும் றியாஸ் முஹமட் தனது பிறந்தமண்ணை நினைவிற்குக் கொண்டு வரும் விதமாக சமீபத்தில் “கல்குடாவின் எழுத்து” என்ற பெயருடன் மத்திய கிழக்கின் “தமிழ் டைம்ஸ்” பத்திரிகையில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், இஸ்லாமிய ஆக்கங்களை தொடர்ந்து எழுதி வருவதுடன், முன்னணி சமூக வலைத்தளங்களிலும் எழுதி வருகிறார். இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள கவிதைகளைத் தொகுத்து ஒரு கவிதை நூல் வெளியிடவேண்டும் என்பது றியாஸ் முஹமட்டின் அடுத்த குறிக்கோள்.

இருமாதங்களுக்கு முன், சென்ற பிப்ரவரி 2015 இல், “தடாகம் கலை இலக்கிய வட்டம்” நடத்திய சர்வதேச கவிதைப் போட்டியில் றியாஸ் முஹமட் முதற்பரிசு பெற்றதுடன் “கவியருவி” சான்றிதழும் பெற்றார்.   வல்லமையிலும் தனது கவிதைகளை தொடர்ந்து எழுதிவரும் றியாஸ்முஹமட்  “கலைமகள் அழைக்கிறாள்!”  என்ற கவிதையில், “கலைமகள் கவி பாட என்னை அழைக்கின்றாள்! நசிங்கிப் போன என் சமூகத்தின் நாளைய விடியலுக்காக, எனது எழுது கோலில் தீ மூட்டித் தீக்குச்சியாய் எரியப் போகிறேன்…” என்று தனது எழுத்துப் பணியின் குறிக்கோளை தெளிவாக முழங்குகிறார்றியாஸ் முஹமட்

வல்லமை இதழில் வெளியான  பாரதி கண்ட புதுமைப்பெண்,  பனமரக் காடு  போன்ற இவரது கவிதைகள், சென்றவாரத்தின் “சீதனம்” கவிதையினை ஒட்டி பெண்களுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் கவிதைகளாக இருப்பினும்,
இவரது பெரும்பாலான கவிதைகளின் தொகுப்பு தெளிவாக விளக்குவது …
செல்வம் திரட்டப்  பணி நிமித்தமாக அயல்நாட்டிற்கு சென்ற இளைஞர்கள், குடும்பத்தையும், உற்றார் உறவினரையும் பிரிந்து தனிமையில் வாடுவதையும்,
தாய்நாட்டை நினைத்து ஏங்கியவண்ணம், சில சமயம் குடும்பத்தாரின் மறைவிற்கும் செல்ல இயலாது அந்தத் துயரை தனிமையில் கழிப்பதையும்,
பணம் என்ற ஒரே காரணத்திற்காக உழைத்து உழைத்து பொருளீட்டும் காலத்தில், இளமைக்காலம் இவர்கள் கண்முன்னே வெறுமையாகக் கடந்து முதிர்ச்சி அடைவதையும்,
திருமணம் செய்து கொண்டாலோ தனது துணையுடன் வாழமுடியாது போகும் நிலையை, ஒரு இளைஞனின் மனக்குமுறல்களைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
கவியருவி றியாஸ் முஹமட் அவர்களின் கவிதைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன….

[குறிப்பு: கவிதைகளில் சில முழுமையாக வழங்கப் பெறாமல் கருத்தைக் கவர்ந்த, மனதைத்  தொட்ட கவிதையின் பகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன, முழுக்க்கவிதைகளையும் படிக்க விரும்புவோர் சுட்டிகளைத் தொடர்ந்து சென்று படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்… ]

எங்க ஊரு! இந்த ஊரு!!

இலங்கையின் முத்துடா..!!
கிழக்கிலொரு சிப்பிடா..!!
செம்மண் புழுதிடா..!!
சங்ககால வாசமடா..!!
என் அன்னை மடிய‌டா..!!
என் அண்ணாமார் வாழும் ஊருடா..!!
ஊர் மெச்சி பாடும்
இவன் கல்குடாவின்
எழுத்தடா..!!
***
ஓட்டமாவடி பாலம்
உன்னை
நினைக்கையில்
மண் வாசனை
வருகிறது,
தாய் வீடு
தெரிகிறது.
காலில் ரெக்கைகள்
முளைக்கிறது,
இதயச் சிறகுகள்
பறக்கிறது………..

***
அம்மா
தாயே,
உன் தோளுக்கு மேல்
நான் வளர்ந்தாலும்…
தொலை தூரத்தில்
நான் இருந்தாலும்…
வீசுதம்மா
உன் சேலை
வாசம்…
ஏங்குதம்மா,
இந்தப் பிள்ளைப்
பாசம்…
இனி,
வேண்டாமம்மா
இந்த வெளிநாட்டு
நேசம்.
போதுமம்மா
இந்தப் போலி,
வேஷம்.
இனி,
உன் காலடியில்தான்
என் சொர்க்கம்.
உன்,
மடியில்தான்
என் மரணம்…
***
தந்தைக்கு ஒரு கவிதை

எழுத நினைக்கிறேன்
ஒரு கவிதை,
அடக்க முடியவில்லையே
என் அழுகை!
எழுது எழுது என்று
நினைக்கிறது மனது
அழுது அழுது
என் பேனாவும் பழுது!
என்ன வாப்பா அவசரம்?
போகும் போதும் சொன்னீர்களாமே
என்னைப் பத்திரம்!
பேனாவை எடுத்தால்
பேச்சு வரவில்லை வாப்பா
ஏட்டை விரித்தால்
எழுத்து வரவில்லை வாப்பா!
காகிதமும் என் கண்ணீரால்
கரைந்து போனதே வாப்பா
தளை தட்டுது வாப்பா
மூச்சு முட்டுது வாப்பா!
எதுகை மோனை கூட
அழுகை வேதனையாக ஆனதே வாப்பா
நான் எழுதிய கவிதைகளும்
கண்ணீர் வடித்துக் கதறுகிறதே வாப்பா!
கூடவே இருப்பீர்கள் என்றுதானே
கொடி போலப் படர்ந்தேன்
பாதியில விட்டுப் போகவா
பனமரம்போல வளர்ந்தேன்?
[…]
போங்கள் போங்கள்!
என் வாப்பா மண் மறைந்தார்
என்று சொல்பவர்கள்
என் கண் மறைந்து போங்கள்!
***
பணம்
போனதும் விமானம்
வந்ததும் விமானம்
மறக்க முடியவில்லை
ஏழையாகப் பிறந்ததால்
நான்பட்ட அவமானம்…!
வண்ண வண்ணக் காகிதம்
வதங்கியது என் வாலிபம்
எல்லாமே செய்தது
இந்தப் பணம்
இல்லாமல் ஆனேன்
நடைபிணம்…!
***
போச்சு எல்லாமே போச்சு!

படித்த படிப்பும்
வீணாகப் போச்சு
வேலைக்காக அரசியல்வாதி
கால் பிடித்து
மானம் போச்சு!
கையில காசி காணாது
மாமா மச்சினன் உறவுகள்
அறுந்து போச்சு
இதுதானடா உறவுகள்
என்று வெறுத்துப் போச்சு!
வாழ்ந்தும் வாழாமலும்
முடியும் நரைத்துப் போச்சு
காதல் என் காதல்
அது கண்ணீரில் கரைந்து போச்சு!
[…]
கல்குடா வாழ்க்கை
வளைகுடா வாழ்க்கையாக
மாறிப் போச்சு
தனியாகவே வாழ்ந்து
வெறுத்துப் போச்சு!
[…]
ஊர் நிலமைகளை நினைத்து
என் தூக்கமும் போச்சு
ஊர் படையெல்லாம்
பெரும் படையாகவும் ஆச்சு!
பணம் இருந்தால் மாத்திரமே
அரச உத்தியோகம் என்பது
சரியாகப் போச்சு
நாடு ரொம்ப கெட்டு போச்சு!
பட்டம் படித்தவன்
பாலைவனம் மேய்வது
பழகிப் போச்சு
சமூகமும் தம் நிலைமறந்து
போச்சு!
படித்தவர்களுக்கு
வேலை என்பது
குழந்தைப் பேச்சு
இதைக் கேட்டுக் கேட்டு
காதும் புளித்துப் போச்சு!
***
முதிர் குமரன்!

வயதுக்கு வந்து பல வருடமாச்சு
மீசையோடு வெள்ளை முடியும்
எட்டிப் பார்த்தாச்சு !
வெட்கமாக இருக்கு வெளியுலகத்துக்கு
தெரிந்து போச்சு நானும் ஒரு
முதுமைக் குமரன்
என்று…!
கூடப் படித்தவர்கள்
எல்லாம்
குடித்தனம் போயாச்சு!
குழந்தை, குட்டிகளோடு
கூடி வருகையில்,
மனசு துடிக்கிறது,
எரி மலையாக வெடிக்கிறது…!
என் பள்ளிப் பருவத்திலேயே
தாய்க்கு வந்தது வாதம்,
கை, கால்களை
முடக்கி வாழ்க்கையைச்
சிதைத்து விட்டது!
மூத்த தங்கை வயதுக்கு வந்து,
இருபது வருடங்களாச்சு !
கல்யாணச் சந்தையில்
காலூன்ற நிற்கும்,
இளைய தங்கை வேறு…!
தங்கைகளை நினைத்து,
உறங்கும் அம்மாவின்
அழுகையும் அதிகமாச்சு !
அவளின் மூச்சும்
வரவரக் குறைந்து போயாச்சு !
எங்கள் ஏழ்மை வாழ்வு
கண்டு குடும்பத்தாரும்,
அயலவரும்
எட்டிப் போயாச்சு !
எங்க வீட்டு எச்சி தின்னு
வளர்ந்த செல்லப்
பூனையும் வீட்டுச்சுவர்
ஏறிப் போயாச்சு !
குடும்பச் சுமையைக் குறைக்க
முதுகுச் சுமை ஏற்றியாச்சு !
வாழ்ந்தும் வாழாமலேயே,
உடம்பு தளர்ந்து,
இளமையும் போயாச்சு !
இனிமேல் என்ன இருக்கு சுமக்க…?
என் தங்கைகளைக்
கரை சேர்க்கும் வரை….
கனவுகளைக் கண்களில்
சுமந்து கொண்டு
வாழும்
நானும் ஒரு
முதிர் குமரன்தான்!
***
மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்…!

கீரைக் கட்டு தின்றாலும்
சேர்ந்து தின்போம்
மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்!
நடுச் சாமம் நாய்க் குரைக்க
நடு நெஞ்சில் நெருப்பு வைக்க
நீயில்லா வீடு பார்த்து,
தெரு நாய்களும் குரைக்குது மச்சான்
என்னைக் குறுகுறுவென பார்க்குது மச்சான்!
ஆராரோ ஆரிரரோ..,
பக்கத்து வீட்டுத் தாலாட்டு
காது கேட்டு, வாட்டுது மச்சான்
என்னை வாட்டுது மச்சான்!
எண்ணைக் கிணத்துல நீங்க
உங்க எண்ணத்தில நாங்க
ராப்பகலா தூங்காம நானிங்கு ஏங்க
என்னத்த வாழ்ந்தோம் மச்சான்
எண்ணங்களுடன்தானே வாழ்கிறோம் மச்சான்!
மாரியில குளிராகி
கோடையில வெயிலாகி
உருமாறித் தடுமாறி
பனியாகிக் காற்றாகி
சருகானேன் மச்சான்!
ஒரு நேந்துவிட்ட கோழிபோல
ஆனேனே மச்சான்….
கீரைக் கட்டு தின்றாலும்
சேர்ந்து தின்போம்
மத்தியக் கிழக்கு போகாத மச்சான்!
நீங்க கழற்றிப் போன சட்டை பார்த்து கண் கலங்குது மச்சான்
நீங்க வைச்ச மரமும் வளர்ந்து நிற்குது மச்சான்
நம்ம குழந்தையும் இப்ப எழுந்து நிற்குது மச்சான்
உங்களைக் கேட்டுத்தானே அடம்பிடித்து அழுகுது மச்சான்!
ஏழு கண்டம் உன்னைத் தாண்டவைத்தான்
ஏக்கத்தோடு என்னை வாழவைத்தான்
பால் நிலவு போல என்னைத் தேயவைத்தான்
பாலைவனப் புழுதியா உன்னைப் பறக்க வைத்தான்!
நம் காதலைச் சேர்த்து வைத்த அந்த இறைவன்
வாழ்தலை ஏன் பிரித்து வைச்சான்..?
இருந்தும் இல்லையென்பது துன்பம் மச்சான்
உன்னோடு வாழ்வதே இன்பம் மச்சான்
பித்துப் பித்து பிடிக்கிறதே மச்சான்
பிச்செறிந்து வாயேன் மச்சான்!
ஏரோப்பிளேன் வாழ்க்கை
வேணாம் மச்சான்
ஏறி வாங்க வாழ்வோம் மச்சான்!
கீரைக் கட்டு தின்றாலும்
சேர்ந்து தின்போம்
மத்தியக் கிழக்க விட்டு வாயேன் மச்சான்!
சிறந்த கவிதைகளைத் தொடர்ந்து வழங்கி வரும் கவிஞர் றியாஸ் முஹமட்டின் இலக்கியப் பணியைப் பாராட்டி, விருதுகள் பல பெற்று, அவர் தமது எதிர்காலக் கனவுகளை அடைவதிலும், குறிக்கோள்களை அடைவதில் வெற்றி பெற வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************

வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]


தகவல் பெற்ற தளம்:  கல்குடா நேசன் (kalkudahnation.com): இளங்கவிஞர் அறிமுகம்-றியாஸ் முஹமட் , ‘தடாகம் கலை இலக்கிய வட்ட’ சர்வதேச கவிதைப் போட்டி

கவியருவி விருது

'தடாகம் கலை இலக்கிய வட்டம்' (பெப்ரவரி மாதம் 2015) நடாத்திய சர்வதேச ரீதியான கவிதைப் போட்டியில் எனக்கு முதலிடமும், 'கவியருவி''  என்ற பட்டமும் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

எல்லாப் புகழும்
அல்லாஹு ஒருவனுக்கே!

தமிழ் மொழி அழியக்கூடாது, கலைஞர்கள் காணமல் போய்விடக் கூடாது, இலைமறை காயாக இருக்கும் இளம் எழுத்தாளர்களை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் தடாக கலை இலக்கிய வட்டத்திற்கும், அதன் அமைப்பாளர்தலைவர்செயலாளர் மற்றும்
தேர்வுக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தடாகம் கலை இலக்கிய வட்டத்தினை நான் படிக்கும் காலத்திலேயே தெரிந்து இருந்தாலும், அன்மையில்தான் அதனோடு இணைய சந்தர்ப்பம் கிடைத்தது.
அதை நான் பாக்கியமாகவே கருதுகிறேன், என் இலக்கியப் பணிக்கு கிடைத்த வரமாக நினைக்கிறேன்.

என்னைப் பாராட்டி ஊக்கப்படுத்திய என் உயிரிலும் மேலான அத்தனை   சகோதர,சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி உறவுகளே!

#றியாஸ்முஹமட்

வெள்ளி, 22 மே, 2015

கலைமகள்


ஆக்கம் ஊக்கம் தந்து
இளம் கவிஞர்களின்
ஏக்கம் போக்கியது
உங்கள் தடாகம்

இங்கு தடம்
பதித்தவர்களோ ஏராளம் !

அலை கடல் போல கவி பாடும்
கலை மகள் ஹிதாயா
நீ கவி உலகைக் காக்க
வந்த தாயா...

நிற்காது ஓடுகிறாயே
பேரிலக்கிய நதியா...
இருண்ட காலத்தைப் போக்க
வந்த சுடர் ஒளியா...

பெண்ணியம் பேசும் பெண்பாரதி
நீங்களல்லவா
மகா பாரதியின் சந்ததி
பொற்கிழி வாங்கிய தமிழச்சி
உன் புகழோ இமயமலை உச்சி
மணக்குது பாரு
பட்டி தொட்டி

கவிதைகளின் ராணி
உன் கவிப்பாக்களில்
மொய்க்கிறது தேனி
மூத்த இலக்கிய ஞானி
இளம் கவிஞர்களை
ஏற்றுவித்த ஏணி

சூரிய அறிவு உங்கள் அறிவு
அதை சூறையாட நினைக்கிறது
என் அறிவு
தாயைத் தேடும் கன்றாய்
உங்கள்
கவிதைகளைத் தேடிப்படிக்கின்றேன் நன்றாய்

நீங்கள் அடிக்க வில்லை தம்பட்டம் ஆதலால் பெற்றீர்கள் பல பட்டம
வெற்றி நடை போடுகிறம்மா
உங்கள் கலை இலக்கிய வட்டம்

உயிரெழுத்து
மெய்யெழுத்து
உயிர் மெய்யெழுத்து
ஆயுத எழுத்து

இவை எல்லா
எழுத்தும்
உன்னாலே பெறுகிறது சத்து
புன்னகையின் சொத்து
சாய்ந்தமருது தந்த
கலை முத்து

#றியாஸ்முஹமட்

எங்க ஊரு! இந்த ஊரு!!


இலங்கையின் முத்துடா..!!
கிழக்கிலொரு சிப்பிடா..!!
செம்மண் புழுதிடா..!!
சங்ககால வாசமடா..!!
என் அன்னை மடிய‌டா..!!
என் அண்ணாமார் வாழும் ஊருடா..!!

ஊர் மெச்சி பாடும்
இவன் கல்குடாவின் 
எழுத்தடா..!!

மரம் வளர்த்த சந்தியடா
மூன்று இனமும் கூடும்
முச்சந்தியடா..!!
எவருக்கும் கொடுக்குமிது
தஞ்சமடா..!!

இந்த ஊருக்கு இல்லை
பஞ்சமடா..!!
கவிஞர்கள் பட்டாளம்
வாழும் ஊரடா..!!
இலக்கிய மகாநாடே
நடத்தலாண்டா..!!

கல்வி மான்கள் வாழும்
ஊருடா..!!
பல கவரிமான்கள்
உயிர் துறந்த மண்ணுடா..!!
ஆறு குளம் கடல் 
கவி பாடுமடா..!!
தெருக்களும் நெலிந்து
நடனமாடுமடா..!!

குறிஞ்சி,முல்லை,
நெய்தல் ,பாலை
இத்தனை அழகும்
ஒரு  ஊரில் எப்படிடா !!
ஓடி வந்து கேளுடா..!!
கல்குடவைப் பாரடா..!!

சூரா சபை சுழல்கிறதுடா..!!
உலமா சபை உலாவுகிறதுடா..!!
பல ஜமாத்தும் இருக்குதடா..!! 
ஹயாத்தோடுதான்
வாழ்கிறதுடா..!!

ஆனாலும் என்னடா..!!
ஆனாலும் என்னடா..!!
கல்குடாவுக்கு ஒரு அரசியல் 
தலைவன் இன்னும்
இல்லையடா..!!

#றியாஸ் முஹமட்

புதன், 13 மே, 2015

பணம் !


போனதும் விமானம்
வந்ததும் விமானம்
மறக்க முடியவில்லை
ஏழையாக பிறந்ததால்
நான்பட்ட அவமானம்..!

வண்ண வண்ணக் காகிதம்
வதங்கியது என் வாலிபம்
எல்லாமே செய்தது
இந்தப் பணம்
இல்லாமல் ஆனேன்
நடைப்பிணம்..!

எல்லாம் கழன்ற பட்ட மரம்
யாருமில்லா தனி மரம்
போட்டார்கள் பல கோஷம்
கண்டேனே பல வேஷம்
ஆடினார்கள் நல்ல
ஆட்டம்..!

உயிரானவளும் மௌனம்
உயிரெடுக்க வந்தான்
எமனும்
உறவுகள் என்னை பந்தாட
ஏறியது விமானம்
பறந்தது ஆகாயம்
வளைகுடா பயணம்

தொலைத்தேன் உறக்கம்
சிந்தினேன் இரத்தம்
ஆனாலும் விடவில்லை
என் ஊக்கம்
சேர்த்தேன்
பணம்... பணம்....!

இப்ப என் பையோ
கனம் கனம்
உறவுக் கடிதங்களோ
தினம் தினம்
உறவாட கூப்பிடுகிறார்கள்
ஊர் சனம்...சனம்...!

பணமில்லா வாழ்க்கை
பூஜ்யம்
இதையறிய எதற்குடா
மியூசியம்

இதைப் புரிந்தால்
நீதானடா
வாலிப சிங்கம்

வருத்தப்படாத
வாலிபர் சங்கம்
உங்களுக்கு இந்தக்
கவிதை சமர்ப்பணம் !

#றியாஸ்முஹமட்

வியாழன், 30 ஏப்ரல், 2015

யூத்


இன்டர் நெட்டில்
இடறி விழுந்தான்
கைபேசியில்
கைதியானான்

விதைக்கும் காலத்தை
விரயம் செய்கிறான்
தல என்கிறான்
தளபதி என்கிறான்

பார்த்து பார்த்து சிரிக்கிறான்
பார்க்காத போதும் சிரிக்கிறான்
போதையில் மிதக்கிறான்
போற இடம் மறக்கிறான்

பேராண்மை என்கிறான்
பேரின்பம் என்கிறான்
தறிகெட்டு ஆடுகிறான்
தகிட தாளம் போடுகிறான்

சிகரெட்டில் தீ வைத்து
சிந்தனைகளை எரிக்கிறான்
எதைப் புரிந்து கொண்டான்
எதை தெரிந்து கொண்டான்

கேள்வி கேட்டால்
கேள்விக்குப் பதில்
யூத்
யூத்தாமாம்

#றியாஸ்முஹமட

சிரிப்பழகி


என்ன அப்படி பார்க்கிறீங்க,சும்மா
பார்த்தேன்.. ஏன் பார்க்கக் கூடாதோ..?
இல்ல அப்படி என்னதான் இருக்கு எங்கிட்ட பார்க்க சிரிப்புடன் கேட்டேன்
உங்கிட்ட என்னடா இல்ல அழகன்டா நீ

மனசிலே 'மின்னல்' அடித்தது ஒரு பெண் அழகு என்று சொன்னதும் யாரு இவள் முதல் பேச்சிலேயே 'டா' போடுகிறாள்
எல்லோரிடமும் சகஜமாகப் பேசுகிறாள் கெட்டிக்காரியும் கூட,
சிரிக்கவே பிறந்தவள் மாதிரி வகுப்பில் அடிக்கடி என்னையே பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு பிடித்தும் பிடிக்காதது போல காட்டிக் கொண்டேன்

நண்பர்கள் என்ன நினைப்பார்கள்
ஒரு நாள் கேட்டு விட்டேன் 'இப்படி அடிக்கடி பார்க்காதீங்க வகுப்பில் மற்றவங்க தப்பாக நினைக்கப் போறாங்க'' சொன்னதுதான் தாமதம் அவள் முகம் என்னவோ போல் ஆகி சிவந்த விட்டது...

அட சே''.. ஏன்டா இப்படிக் கேட்டேன் பாவம்....'

எனக்கோ இருப்பு கொள்ள வில்லை
அன்றிலிருந்து அவள் அதிகம் பார்ப்பதில்லை எப்போதாவது ஒரு முறை பார்ப்பாள் அதுவும் முறைத்து.

அவள் சும்மா பார்ப்பதை விட முறைத்து பார்ப்பது பிடித்திருந்தது பல மாதங்களாக அவள் முறைப்பு பார்வையிலேயே பல வகுப்புகள் கழிந்தது

அன்று ஒரு நாள் சரியான மழை யாருமே இன்று பின்னேர வகுப்புக்கு வரமாட்டார்கள் என்று நினைத்தவாறே  என் சைக்கிளை  'சன்ரைஸ்   டியூட்டரியின் பக்கமாக மிதித்தேன்

அங்கே மழைத்தூறலில் குடையுடன் அவசர அவசரமாக ஒரு உருவம் நடந்து செல்கிறது யாராக இருக்கும் நெருங்கும் போதே தெரிந்து விட்டது அதே சிரிப்பழகி என்று..

சவனாட்டு சந்தியின் ரயில்வே கடவையை கடக்கும் முன்பே அவளை விரட்டி மடக்கி பிடித்து விட வேண்டும் என்ற  ஆசை பேராசையாக மாற பறந்தது என் சைக்கிள்....

என்னைக் கண்டதும் அவள் முகத்தில் குட்டி சந்தோசம் ஆனாலும் காட்டிக் கொள்ளவே மாட்டாள் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்குகிறாள் என்று மட்டும் லேசாக புரிந்தது.

ஹுதா பள்ளி றோட்டில் வடிந்தோட வழியில்லாது சிதறிக்கிடக்கும் தண்ணீரை அவள் கடந்து செல்லும் அழகோ அழகு எத்தனைபேர் போனாலும் நம்ம பிகரை பார்ப்பது அது ஒரு தனி சுகம்தானே!

அன்று வகுப்பில் யாருமேயில்லை எங்கள் இருவரையும் தவிர வெள்ளம் 'சன்ரைஷ்' டியூட்டரியின் உள்ளே வரட்டுமா என்று அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது

நாங்களும் மழையில் உள்ளே இருக்கவும் முடியாது வெளியே போகவும் முடியாது அவதிப்படுவதும் இருவருக்குமே நன்கு புரிந்தது எப்படியாவது பேச மாட்டாளா என் மனம் ஏங்கித்தவித்தது.

ஒருவாறு  சுதாகரித்துக் கொண்டு பேசினேன்,

'என்ன.. உங்கள் நண்பிகள் வரவில்லையா.? ''

'மழையால கூட்டப் போக வில்லை அப்படியே வந்து விட்டேன்..'

ஓஓ..மழையும் பாராது படிப்பில்  இவ்வளவு அக்கறையோ..?  இல்ல என்னை பார்க்கத்தான்...

'உங்கள் நண்பர்கள் யாரும் வரல..? '
அவள் கேள்வி என் எண்ணத்தை திருப்பியது

'இல்ல நானும் அப்படியே வந்து விட்டேன் யாரையும் கூட்ட போகல குடையைக் கூட எடுக்கல பாருங்களேன்'  ஒரு சிரிப்பு ஆனாலும் ரொம்ப ஓவராக பேசிவிடக் கூடாதென மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்..

ஒருவேளை இவளும் நம்மைப்போல் நினைத்து விட்டாள் அவளைப் பார்க்க வந்தேன் என்று..

சேசே.. அப்படி நினைக்கமாட்டாள் நினைத்தாலும் அதுதானே உண்மை கிளாஸ் கட் அடிக்காம வாரதே அவளுக்காக தானே  என்னையே சமாதானப்படுத்தினேன்

விடுபட்ட பாடங்களை எழுதிக் கொண்டிருந்தாள்...
தூரத்திலிருந்த என் கண்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்தது அவள் எழுத்து
உடல் சிலிர்த்து, அந்த மழையிலும் வியர்த்ததே என் கழுத்து.!

மழை சற்று ஓய்ந்து விட காற்று வீசியது டியூட்டரி கதவை இரண்டு குடைகள் முட்டியது.

வருவது என் நண்பர்களாகவோ இல்ல அவள் நண்பிகளாகவோ இருக்கக் கூடாது உள் மனதில் பிராத்தித்தவனாக யாரோ மழைக்கு ஒதுங்குகிறார்கள் என்று நினைத்தேன்

இல்ல அவர்கள் எங்களை நோக்கிதான் வருகிறார்கள் எனத் தெரிந்தது

அங்கே,
மழையில் நனைந்த தும்பிகளாக அவளின் நண்பிகள்
குடையை மடக்கியவாறே  உள்ளே நுழைந்தார்கள்..

பெரும் ஏக்கத்தோடு படபடத்து ஓய்ந்தது எங்கள் இருவரின்  விழிகள்
இங்கு விழியின் வலிகளும் வரங்கள் அல்லவா...!!